< Back
ஆன்மிகம்
திருப்பதிக்கு நிகரான திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில்
ஆன்மிகம்

திருப்பதிக்கு நிகரான திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில்

தினத்தந்தி
|
23 Dec 2024 7:18 PM IST

இந்த ஆலயத்திற்கு வந்தால் திருப்பதிக்கு சென்று வந்த அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவேங்கடநாதபுரத்தில் தென்திருப்பதி, கீழ்திருப்பதி மற்றும் காளகஸ்தி தலமான சிவன் கோவிலையும் வணங்கும் வாய்ப்பு உள்ளது. தாமிரபரணி ஆறு இந்த ஊரில் மேற்கில் இருந்து கிழக்காக ஒடுகிறது. திருப்பதி மலை வெண்ணிற கற்களால் ஆனது. அதேபோல் இக்கோவில் குன்றுகளும் வெண்நிற கற்களாக அமைந்துள்ளன. வட திருப்பதியில் எழு மலைகளின் நடுவே சீனிவாசர் குடி கொண்டுள்ளார். அதேபோல் திருவேங்கடநாதபுரத்தில் எழு நிலைகள் தாண்டி சீனிவாசர் குடிகொண்டுள்ளார்.

அதாவது, திருவேங்கடநாதபுரம் ஊரைக் கடந்து ஒரு மேடு, குளத்தைத் தாண்டிச்சென்றதும் ஒரு மேடு, யானை சரிவுபாதை வழியாக கீழ ரதவீதிக்கு வருவது ஒரு மேடு, பன்னிரண்டு படிகளைத் தாண்டி கோவில் இருக்கின்ற பகுதி ஒரு மேடு, கொடி மரம் ஒரு மேடு, உற்சவர் இருக்கின்ற அர்த்த மண்டபம் ஒரு மேடு, இறுதியாக கருவறை ஒரு மேடு என 7 மேடுகள் உள்ளன.

திருப்பதிக்குச் செல்பவர்கள் காளகஸ்தி சென்று வணங்கிவிட்டு அங்கு சிவபெருமானின் அருள்பெற்று பின் கீழ்திருப்பதியை வணங்கித்தான் ஏழுமலையானை வணங்க ஏறுவார்கள். அதேபோல் இந்த ஊரில் முதலில் காளகஸ்தியாக நவகயிலாயங்களில் ராகு ஸ்தலமான கோதபரமேஸ்வர்-சிவகாமி அம்பாளை வணங்குகிறார்கள். அதன்பின் கீழ் திருப்பதியாக பார்க்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று அவரையும் வணங்குகிறார்கள். இறுதியாக வேங்கடநாதன் எம்பெருமான் சீனிவாசனை வணங்க ஏழுமேடுகளைத் தாண்டி வருகிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு வந்தால் திருப்பதிக்கு சென்று வந்த அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம். இங்குள்ள மூலவர் 'திருவேங்கடநாதன்' என்று அழைக்கப்படுகிறார். வடவேங்கமுடையானே இங்கும் வெங்கடாசலபதியாக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

வடவேங்கடத்திலே எழுந்தருளியுள்ள அலமேலு மங்கை தாயாரும் இங்கு அருள்பாலிப்பதைக் காணமுடியும். கோவிலின் பன்னிரண்டு படிகளும் பன்னிரு ஆழ்வார்களாக கருதப்படுகின்றன. இக்கோவிவில் வெல்லம், நெய், அரிசி, இளநீர், தேன், சர்க்கரை போன்ற பொருட்களை துலாபாரமாக கொடுப்பார்கள். தோல் சம்பந்தப் பட்ட நோய் இருந்தால் இளநீரும், சர்க்கரை நோய் தீரவேண்டும் என்றால் வெல்லமும், நோய்க்கு ஏற்றபடி துளசி, தேன, காசு உள்பட பொருட்களையும் துலாபாரமாக வழங்குகிறார்கள்.

கோவில் கொடிமரத்தில் வன தேவதை உள்ளார். பூச்சட்டை சாத்தி இவர் வழிபடுகிறார்கள். இங்கு வழங்கப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. எனவே பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தம் வாங்குவதை பெரும் பாக்கியயாக கருதுகிறார்கள். உயரமான கட்டிடத்தில் வேலைகள் செய்பவர்கள் தங்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், தீராத நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த பூஜையை செய்கிறார்கள்.

இந்தக் கோவில் தீர்த்தக் கட்டமான 'வாசன் தீர்த்தக் கட்டம்' என்பது. பாபநாசத்திற்கு நிகரானது. இங்கு தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு கல் மண்டபமும், ஆற்றில் இறங்க படித்துறையும் அமைந்துள்ளது. இந்தத் தீர்த்த கட்டம் செல்ல கோவிலில் உள்ள தெற்கு ரத வீதி வழியாக பாதை உள்ளது.

இக்கோவில் திருப்பதிக்கு நிகரான அந்தஸ்தையும், சிறப்பையும் பெற்றுள்ளதால் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்களை இந்த தென் திருப்பதி கோவிலில் செலுத்தலாம்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் கோடீஸ்வரநகர் அருகில் இருந்து சென்றால் கோவிலை அடையலாம். நெல்லை சந்திப்பில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும், டவுன் பஸ் வசதியும் உள்ளது.

மேலும் செய்திகள்