கொல்ல வந்த அம்பு காதணியானது.. அனுமன் அவதார மகிமை
|அனுனை அழிக்க வந்த அம்பு, சிவபெருமானின் கோபப் பார்வையில் உருகி அற்புத அணிகலன்களாக மாறின.
கர்ணன் கவசகுண்டலங்களுடன் பிறந்ததுபோன்று காதில் அணிகலனுடன் பிறந்தவர் அனுமன். கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த வாலி, பிற்காலத்தில் அஞ்சனைக்கு பிறக்கப் போகும் பிள்ளையால் தனக்கு ஆபத்து வரப் போகிறது என்பதை ஜோதிட வல்லுநர்களிடம் இருந்து அறிந்தான். தன் எதிரியை கருவிலேயே அழிக்க நினைத்த வாலி, தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்களை சேர்த்து அம்பு ஒன்றை தயார் செய்தான்.
அதனை உறக்கத்தில் இருந்த அஞ்சனையின் வயிற்றில் எய்தான். ஆனால் அஞ்சனையின் வயிற்றில் இருந்த கரு சிவபெருமானின் அம்சம் அல்லவா? அந்த முக்கண்ணனின் கோபப் பார்வையில் அம்பு உருகி, அஞ்சனைக்கும் வயிற்றில் இருந்த கருவிற்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு உருகிய அம்பு, அற்புத அணிகலன்களாக மாறி கருவில் இருந்த குழந்தையின் காதுகளை அலங்கரித்தது.
இதனால் அனுமன் பிறந்தபோதே, காதணிகளுடன் பிறந்ததாக புராணம் கூறுகின்றது.