சனி தோஷம் நீக்கும் தஞ்சை மூலை அனுமன்
|மூலை அனுமன் கோவிலில் 48 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிவனின் அம்சமாக கருதப்படும் அனுமன், வைணவ கோவில்களில் தனி சன்னிதியில் வீற்றிருப்பார். அவர் மூலஸ்தானத்தில் காட்சி தரும் கோவில்கள் மிகக்குறைவு. அவ்வாறு அமைந்திருக்கும் கோவில்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்புடன் தஞ்சை மேல வீதியில் அமைந்துள்ளது மூலை அனுமன் கோவில்.
இங்கு அனுமன், விமான கோபுரம், கொடி மரத்துடன் கூடிய கோவிலுக்குள், மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளில் மேலவீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் வடமேற்கு வாயு மூலையில் இக்கோவில் அமைந்திருப்பது
தனிச் சிறப்பு.
இங்கு மூலை அனுமன் நின்ற கோலத்தில், வலது கரத்தில் அபய முத்திரை, இடது கரத்தில் சவுகந்திகா மலரை மார்போடு அணைத்தபடி காணப்படுகிறார். வாலின் நுனியில் மணி அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மன் இந்தக் கோவிலை கட்டியுள்ளார். பிரதாப சிம்மனின் ஆன்மிக குரு ஆதிபீம ராஜகோஸ்வாமியின் சீடர் சேதுபாவா சுவாமிகள் மூலை அனுமனை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
பகவத்கீதையில் உள்ள 18 அத்தியாயங்களை குறிக்கும் வகையில் இந்தக் கோவிலில் 18 தூண்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக பக்தர்கள் 18 அகல் விளக்கேற்றி, 18 முறை வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் 1,008 முறை ராமநாமத்தை உச்சரித்தோ, அல்லது 1,008 முறை ராம நாமத்தை எழுதியோ மூலை அனுமனை வணங்கினால் நினைத்த காரியம் நினைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கார்த்திகை மாதத்தில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் 27 அகல் விளக்குகளை (நட்சத்திர தீபம்) ஏற்ற வேண்டும். பின்னர் 27 வாழைப் பழங்களால் ஆன மாலையை சுவாமிக்கு சாற்றி வழிபட்டால், மீண்டும் பிறவா வரம் கிடைக்கும். அதேபோல 27 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை மற்றும் 27 வெற்றிலை கொண்டு தொடுக்கப்பட்ட மாலையை சாற்றி வழிபட்டால் எமபயம் நீங்கும். எதிரிகள் தொல்லை அகலும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
ராகு கேது
மார்கழி மாத அமாவாசை தினத்தன்று அவதரித்த அனுமனை, மார்கழி மாதத்தில் 108 முறை வலம் வந்து வழிபடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். மார்கழி மாதத்தில் பக்தர்கள் இந்தக் கோவிலை 108 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த வேண்டுதல்களை அடுத்த மார்கழிக்குள் நிறைவேற்றி தருவதாகவும் நம்பப்படுகிறது. கோவிலில் 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பம் அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரவர் ராசிக்கு முன்பாக நின்று வழிபடுகின்றனர்.
ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை விஷ்ணு, தேவர் களுக்கு வணங்கினார். அப்போது அசுரன் ஒருவன் தேவர்கள் உருவில் வந்து அமிர்தத்தை பருகினான். இதனை அறிந்த சூரியனும், சந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு தனது சக்ராயுதத்தால் அசுரனின் தலை வேறு உடல் வேறாக வெட்டி வீசினார். அமிர்தத்தை பருகியதால் அசுரனின் வெட்டப்பட்ட உடல் ராகுவாகவும், தலை கேதுவாகவும் மாறியது.
இதன் காரணமாக சூரிய, சந்திர கிரகணம்போது ராகுவும்-கேதுவும் சூரியனையும், சந்திரனையும் கவ்வி பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனை எடுத்துக்காட்டும் வகையில் இக்கோவிலில் சூரிய, சந்திரனை பாம்பு (ராகு-கேது) கவ்வி பிடிப்பதை போன்ற சிற்பம் உள்ளது. பக்தர்கள் அதன் அடியில் நின்று பிரார்த்தனை செய்தால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் ஆண்டுதோறும் அமாவாசை தினத்தில் மூலை அனுமன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு மூலை அனுமன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து 18 அமாவாசை வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். புதிய மஞ்சள் திரியில் 18 எலுமிச்சை பழத்தில் தீபமேற்றி வழிபட்டால் செய்வினை, பில்லி, சூனியம் அண்டாது என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
சனி தோஷம்
மேலும் இக்கோவிலில் உள்ள மூலை அனுமனை மனதார வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். அதுமட்டுமின்றி 18 அமாவாசைகள் அல்லது 48 சனிக்கிழமைகள் தொடர்ந்து கோவிலுக்கு வர வேண்டும். 18 அகல் தீபம் ஏற்றி சாமிக்கு 18 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி கோவிலை 18 முறை வலம் வந்து சனிதோஷம் நிவர்த்தி காணிக்கையாக ரூ.18-ஐ உண்டியலில் செலுத்தி வழிபட்டால் சனிதோஷம் உள்பட நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
ஏழைரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, பாதச் சனி, ஜென்மச் சனி, அஷ்டமச் சனி, பஞ்சமச் சனி, கண்டகச் சனி மற்றும் சனி திசை, சனி புத்தி நடப்பவர்கள் மூலை அனுமனை தரிசனம் செய்தால் எப்பேர்ப்பட்ட சனி தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறத
இக்கோவில் காலை 7 மணி முதல் நண்பகல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை தினத்தன்று நாள் முழுவதும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சுமார் ½ கி.மீ தொலைவில் மேலவீதியில் இக்கோவில் அமைந்துள்ளது. ரெயில் மூலம் வருபவர்கள் தஞ்சை ரெயில் நிலையத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு செல்லலாம். பஸ்சில் வருபவர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை காரில் இக்கோவிலை அடையலாம்.