
தைப்பூச திருவிழா: அறுபடை வீடுகளில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கோவில்களுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பழனியில் தைப்பூசத்தின் சிகர நிகழ்வான முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருத்தேர் எழுந்தருளிய நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'அரோகரா' கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்செந்தூரில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
இதேபோல் சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு வருகை தந்து, நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.