தைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் கள்ளழகர் நீராடல்
|நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் மணிக்கணக்கில் நீராடினார்.
மதுரை,
மதுரை அழகர்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கள்ளழகர் பெருமாள் மூலவர் சன்னதியிலிருந்து புறப்பாடாகி மேட்டு கிருஷ்ணன் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
12-ந் தேதி சீராப்திநாதன் சேவை நடந்தது. இதில் அதே சன்னதியில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் பல்வேறு பூஜைகளுக்கு பிறகு சுவாமி, பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில் வழியாக அழகர் கோவிலில் இருந்து யானை, குதிரை என சகல பரிவாரங்களுடன், மேளதாளம் முழங்க அலங்கார பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி புறப்பட்டார். மலைப்பாதை வழியாக நூபுரகங்கைக்கு சென்றார்.
செல்லும் வழியில் உள்ள அனுமார், கருட தீர்த்த எல்கைகளில் விஷேச பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சுவாமி நூபுரகங்கைக்கு சென்றார். முன்னதாக அங்கு உள்ள மண்டபம் முழுவதும், வண்ண மலர்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள மாதவி மண்டபத்தில் பகல் 12 மணிக்கு கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டது.
அதன் பிறகு நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் மணிக்கணக்கில் நீராடினார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின்னர் பட்டர்களின் பாராயணமும், வேத மந்திரங்களுடன், திருமஞ்சனமும் நடைபெற்றது. அங்கேயே மேற்கு முகம் பார்த்து அமர்ந்த நிலையில் உள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது.
தைலக்காப்பு திருவிழாவை காணபல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் சுவாமி அங்கு இருந்து புறப்பாடாகி மீண்டும் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார். இத்துடன் 3 நாள் திருவிழா நிறைவு பெற்றது.