
தை பவுர்ணமி: திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.59 மணி அளவில் தொடங்கி இன்று இரவு 8.16 மணி அளவில் நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்றனர். காலை சுமார் 8 மணிக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகலில் வழக்கத்தை விட வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக வி.ஐ.பி.க்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.