ஆன்மிகம்
வார விடுமுறையையொட்டி தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆன்மிகம்

வார விடுமுறையையொட்டி தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
22 Dec 2024 5:08 PM IST

வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில், இன்றைய தினம் வார விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

அதே போல், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னிதீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், அங்குள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று மார்கழி மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை என்பதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். அங்குள்ள ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகனின் 5-ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலிலும், இன்று வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்