ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்
ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்

தினத்தந்தி
|
9 Jan 2025 12:14 PM IST

வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார். இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது.

இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து மோகினி அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.

நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். 2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் 'ரங்கா ரங்கா' கோஷம் முழங்க அரங்கனை பின்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள். பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

அதன்பின் சாதரா மரியாதையாகி (பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். ராப்பத்து பெருவிழாவின் 7-ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறும்.

மேலும் செய்திகள்