< Back
ஆன்மிகம்
சிவராத்திரியின் சிறப்புகள்!
ஆன்மிகம்

சிவராத்திரியின் சிறப்புகள்!

தினத்தந்தி
|
28 Oct 2024 4:23 PM IST

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, சிவபெருமானை வழிபடுவதற்கும் உகந்த சிவராத்திரியாக போற்றப்படுகிறது. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும்.

பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவதைகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள்.

புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளன. சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டால் மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. அந்த நாளே சிவராத்திரி என்பர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்திரி எனக்கூறுவர்.

மார்க்கண்டேயனின் உயிரைக் காக்க சிவன், எமனை காலால் உதைத்தார். அதன் பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள் வேண்டினர். அந்த நாளே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினமும் சிவராத்திரி என கருதப்படுகிறது.

சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களுக்கும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கினாள். இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள்.

"சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும், அதற்கு அருள் புரியவேண்டும்" என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகட்டும் என சிவபெருமானும் அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால், சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைப் பிடிக்க வேண்டிய விரத முறைகள் உள்ளன. சிவராத்திரி விரதம் இருப்பதால் நமது பாவங்கள் நம்மை விட்டு நீங்கும், சிவராத்திரி அன்று சிவபதம் அடைபவர்கள் மோட்சத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்