கால் மூட்டு எலும்பு தேய்வா..? சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள்
|சித்த மருந்துகளை பயன்படுத்துவதுடன், எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்கள் அல்லது புண்கள் ஆகியவற்றால் வீக்கம் அல்லது வலி ஏற்படுகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இதனால் மூட்டு வலி வருகிறது. ஆனால் பெரும்பாலும் எலும்பு குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற கீல்வாதம் தான் அதிகம் .
1. எலும்பு குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற கீல்வாதம் (ஆஸ்டியோ ஆர்தரைடிஸ்) :
இவ்வகை மூட்டுவலி வயதானவர்களையும், மகளிரையும் மிக அதிகமாக பாதிப்படையச் செய்கிறது. இந்த வகை வாதத்தில் கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலகீனமடைந்து , இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது, மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது, இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால்வலி, வீக்கம், சூடு இவற்றை ஏற்படுத்துகிறது.
2. முடக்கு வாதம் (ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்):
முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. நம் உடல் நோயெதிர்ப்பு அமைப்பு நம் சொந்த உடலின் திசுக்களை தவறுதலாக தாக்கும்போது இது நிகழ்கிறது. இவ்வகை வாதத்தில் எலும்பில் தேய்வுகள் இருக்காது. ஆனால் வலி, வீக்கம், காலை எழுந்தவுடன் வலி நடக்க சிரமப்படுதல் போன்ற குறி குணங்கள் காணப்படும்.
3. யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படும் கீல்வாதம்:
ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்து , யூரிக் அமிலம் மூட்டுகளில் உள்ள இடைவெளிகளுக்குள் படிந்து வீக்கம், வலியை ஏற்படுத்துகிறது.
4, பாக்டீரியா தொற்றால் ஏற்படும் செப்டிக் ஆர்த்ரைடிஸ்:
செப்டிக் ஆர்த்ரைடிஸ் என்பது முக்கியமாக பாக்டீரியா தொற்று காரணமாக உருவாகிறது. நம் மூட்டுகளிடையே உராய்வைத் தடுக்க சினோவியல் திரவம் உள்ளது. பாக்டீரியாக்கள் இந்த திரவத்தில் நுழையும்போது, அவை குருத்தெலும்புகளை சேதப்படுத்தி, இறுதியில் மூட்டு வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய வாத வகைகளில் பெரும்பாலும் எலும்பு குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் வகை வாதம்தான், வயதான ஆண்கள் மற்றும் மகளிரை மிகவும் அதிகமாக பாதிப்படையச் செய்கிறது. மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவதும் முக்கிய காரணமாகும். ஆகவே இவ்வகை வாதத்திற்கான மருத்துவ முறை பற்றி பார்ப்போம்.
தவிர்க்க வேண்டியவை :-
1. உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். எளிய வகை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
2. எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், எள், முருங்கைக் கீரை, முட்டைகோஸ், பிரக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, ஆட்டுக்கால் மற்றும் ஆட்டிறைச்சி வகைகள், கீரைகளில் வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி கீரை போன்றவைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
நாம் உண்ணும் உணவில் சோயாபீன், பிரண்டை தண்டு, எலும்பொட்டி கீரை, முடவாட்டுக்கால் கிழங்கு (Drynaria என்னும் பெரணி வகை செடியின் கிழங்கு), அத்திப்பழம், பேரீட்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது.
தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது, புளிப்பு சுவை உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.
3. சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
1. அமுக்கரா சூரணம் -1 கிராம்,குங்கிலிய பற்பம் -200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் -200 மிகி, ஆறுமுகச் செந்தூரம் -200 மிகி இவைகளை மூன்று வேளை, தேன், அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
2. அமுக்கராச் சூரணம் -1 கிராம், பூரணச் சந்திரோதயம் -100 மிகி, சங்கு பற்பம் -200 மிகி, இவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
3. நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, வாதநாராயணன் இலை, தழுதாழை இலை இவைகளை, ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
4. வாத கேசரி தைலம், கற்பூராதி தைலம், விடமுட்டி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள மூட்டுகளில் தேய்த்து, வெந்நீர் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.