< Back
ஆன்மிகம்
மகா சிவராத்திரியையொட்டி குமரியில் நாளை சிவாலய ஓட்டம்
ஆன்மிகம்

மகா சிவராத்திரியையொட்டி குமரியில் நாளை சிவாலய ஓட்டம்

தினத்தந்தி
|
24 Feb 2025 7:39 AM IST

மகா சிவராத்திரி விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிவாலய ஓட்டம் நடைபெறும்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. சைவ - வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியுடன், 'கோபாலா... கோவிந்தா...' என்னும் பக்தி கோஷங்களுடன் 12 கோவில்களுக்கு ஓட்டமாகச் சென்று வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளை மறுநாள் (புதன்கிழமை) வருகிறது. இதையொட்டி பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 27-ந் தேதி காலையில் நிறைவு செய்கின்றனர்.

இந்த சிவாலய ஓட்டம் முன்சிறை அருகே உள்ள திருமலை சூலபாணி மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இந்த கோவிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் கோவில், திருவிதாங்கோடு பக்தவல்சன் கோவில், திருப்பன்றிகோடு பருதிபாணி மகாதேவர் கோவில் வழியாக சென்று இறுதியில் நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் ஓட்டத்தை முடிக்கின்றனர்.

இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் மொத்தம் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருவார்கள். இந்த ஓட்டத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சில பக்தர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் குடும்பம் குடும்பமாக சிவாலய தரிசன பயணம் மேற்கொள்வார்கள். இவர்கள் நாளை மறுநாள் முன்சிறையில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் 12 கோவில்களிலும் தரிசனம் செய்வார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கோவில் வளாகங்களில் பக்தர்கள் அமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்படும்.

குமரி மாவட்ட பக்தர்கள் சிவாலய ஓட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களில் நடைபெறும் சிவராத்திரி பெருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்