< Back
ஆன்மிகம்
புரட்டாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ஆன்மிகம்

புரட்டாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

தினத்தந்தி
|
18 Sept 2024 2:52 AM IST

இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி நேற்று காலை 11.27 மணியளவில் தொடங்கியது. மேலும் நேற்று புரட்டாசி மாதப்பிறப்பு மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடங்கினர். கிரிவலம் செல்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

மேலும் பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பந்தல் அமைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக அமைந்தது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

பௌர்ணமி கிரிவலம் இன்று (புதன்கிழமை) காலை 9.10 மணியளவில் நிறைவடைந்தது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். வெளியூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்