அய்யப்ப வழிபாட்டில் பேட்டை துள்ளல்.. எருமேலியின் சிறப்பு
|பேட்ட துள்ளலில் பங்கேற்கும் அய்யப்பசாமிகள், சுவாமி திந்தக்கதோம் அய்யப்பா திந்தக்கதோம் என்று பாட்டுப் பாடி நடனமாடுவார்கள்.
அய்யப்ப வழிபாட்டில் பேட்டை துள்ளல் சடங்கும் ஒன்று. சுவாமி அய்யப்பன், மஹிஷி என்னும் அரக்கியை வதம் செய்து வெற்றிகொண்டதன் நினைவாக ஆடிப்பாடி பேட்டை துள்ளல் எனப்படும் நடனம் ஆடப்படுகிறது. சபரிமலை புனிதப் பயணக்காலம் ஆரம்பித்ததன் அறிகுறியாகவும் இது நடத்தப்படுகிறது. பேட்டை துள்ளாத அய்யப்பன் எவரும் கோட்டப்படி கடந்து சுவாமியின் பூங்காவனம் (காட்டின் பெருவழியில் ஆரம்பப்பகுதி) மிதிக்கக்கூடாது என்பது ஐதீகம்.
அய்யப்பன்மார்கள் பழங்குடியினரைப் போல தங்கள் உடலிலும் முகத்திலும் வண்ணங்கள் பூசிக்கொண்டு, கரிகளால் பூசப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு சரக்கோல் (அம்புகள்) மற்றும் மரக்கட்டைகள் போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள்.
அனைவரும் எருமேலி தர்ம சாஸ்தா கோவில் அடைந்து அய்யப்பனை வணங்குவர். எதிரில் உள்ள வாவரையும் வணங்கி "சுவாமி திந்தக்கதோம் அய்யப்பா திந்தக்கதோம்'' என்று மேளதாளத்துடன் பாட்டுப் பாடி பேட்டைத் துள்ளலை ஆரம்பிக்கின்றனர்.
எருமேலியில் பெரியம்பலம், சிறியம்பலம் என்ற இரண்டு சாஸ்தா கோவில்கள் உள்ளன. சபரிமலை யாத்திரையில் முதலில் இங்கு தான் செல்ல வேண்டும். அய்யப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோவில்களில் உள்ளன. பகவதி, நாகராஜா சன்னதிகளும் இங்குள்ளன. சிறிய கோவிலில் பேட்டை கட்டும் பக்தர்கள், பெரிய கோவில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்வர். சிவ பூத கணங்களை வணங்கி கோவிலில் உள்ள தலப்பாறையில் காணிக்கை செலுத்தி, கொடுங்காடு வழியாக சபரிமலைக்கு பயணத்தை தொடர்வார்கள்.
மகரவிளக்கு பூஜைக்கு மூன்று நாளுக்கு முன், எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு அய்யப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது.