< Back
ஆன்மிகம்
மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
ஆன்மிகம்

மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 5:52 PM IST

மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. அதோடு, இன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகளான எஸ்.அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மூல மந்திரம் சொல்லி பொறுப்பேற்று கொள்கின்றனர்.

நாளை (சனிக்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து பகல் 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாள பூஜையை தொடர்ந்து இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். 2 மாதம் தொடர்ந்து நடைபெறும் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி மண்டல பூஜையும், முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்

நடப்பு சீசனையொட்டி மரக்கூட்டம் முதல் வலிய நடை பந்தல் வரை பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை 8 இடங்களில் 16 ஆயிரம் பேர் ஓய்வு எடுக்க 3 நிரந்தர பந்தல்கள் உள்பட 8 பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 2,600 கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்