< Back
ஆன்மிகம்
நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆன்மிகம்

நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
29 Oct 2024 8:09 AM IST

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் காந்திமதி அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

11-ம் திருநாளான நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து காந்திமதி அம்மன் தவக்கோலத்துடன் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணக்கோலத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்மன் அருகே சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளினார். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றபட்டு திருமண வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து திருமண சடங்குகள் செய்யப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்மன் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வீதி உலா நடைபெறுகிறது. இன்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையிலும் அம்மன் ஊஞ்சல் திருவிழா நடைபெறும். 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்