சபரிமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்
|சபரிமலையில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். சபரிமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பான யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள், கோவில் நிர்வாகம் மற்றும் கேரள மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சபரிமலையில் நேற்று 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றைய தினம் சபரிமலையில் கூட்டநெரிசல் சற்று குறைவாகவே காணப்பட்டது. இதனால், பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் ஒவ்வொரு வரிசை முடிந்த பிறகு, நடைப்பந்தலில் இருந்து பதினெட்டாம் படி ஏறி அய்யப்ப சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.