மார்கழி மாதப்பிறப்பு: அதிகாலையில் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
|மார்கழி மாதப்பிறப்பு முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சென்னை,
ஆன்மிக மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் தினமும் பக்தர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக அதிகாலையில் பெண்கள் வீடுகளின் முன்பு வண்ண, வண்ண கோலமிட்டும், விளக்கேற்றியும், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று, விளக்கேற்றியும் வழிபடுவார்கள். மேலும் குழந்தைகள் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று, வருவது வழக்கம்.
அந்த வகையில், இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவன் மற்றும் வைணவ கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மார்கழி மாதப்பிறப்பு முன்னிட்டு பெருமாள் கோவில்களில் மார்கழி முதல் நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பலர் குழுக்களாக இணைந்து பஜனை பாடல்களை பாடி, தெருக்களில் அதிகாலை நேரத்தில் வலம் வந்தனர்.
அதேபோல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டின் போது கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மார்கழி மாதம் முழுவதும் இந்த பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.