< Back
ஆன்மிகம்
ராமேஸ்வரம்- காசி யாத்திரையில் சேது மாதவர் வழிபாடு
ஆன்மிகம்

ராமேஸ்வரம்- காசி யாத்திரையில் சேது மாதவர் வழிபாடு

தினத்தந்தி
|
22 Oct 2024 11:59 AM IST

ராமேஸ்வரம், பிரயாகை, காசி ஆகிய மூன்று இடங்களும் சிவபெருமானுக்கு உரிய இடங்களாக பொதுவாக அறியப்பட்டாலும், இந்த மூன்று இடங்களிலுமே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்.

சந்திர வம்சத்தில் புண்ணியநிதி என்ற அரசன் பிறந்து, மதுரையை ஆண்டு வந்தார். இந்த மன்னருக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீது அதீதமான பக்தி இருந்தது. தன் முன்னோர்களுக்காவும், தனக்கு மகள் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், அவர் ராமேஸ்வர யாத்திரை செல்ல எண்ணினார். தன் மகனிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டு, தன் மனைவி மற்றும் படை பரிவாரங்களுடன் ராமேஸ்வரம் வந்தார். தனுஷ்கோடியில் தங்கி எல்லாவித புண்ணிய தீர்த்தங்களிலும் முறைப்படி குளித்து, ராமநாதரை வழிபட்டு அங்கேயே தங்கியிருந்தார்.

அந்த நேரத்தில் படித்த வேத விற்பனர்களைக் கொண்டு பகவான் விஷ்ணுவை வேண்டி ஒரு யாகமும் செய்தார். அந்த யாகம் முடிந்தபின் தன் மனைவியுடன் புனித நீராட தனுஷ்கோடி சென்றார். நீராடிய பின் தான - தர்மங்கள் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் அழகிய சிறுமியைக் கண்டார். ஐந்து வயதுடைய அந்த பெண் பிள்ளை, அரசனை நோக்கி "மன்னா.. நான் தாய் - தந்தை இல்லாதவள். என்னை உன் மகளாக ஏற்று வளர்த்து வருகிறாயா?" என கேட்டது.

அரசனும் "மகள் வேண்டிதான் இத்தனை தூரம் வந்தேன். நீ பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருக்கிறாய். நீ அவசியம் என்னுடன் வா" என அழைத்தார். அப்பொழுது அந்த பெண் குழந்தை "அரசே.. ஒரு நிபந்தனை உண்டு. என்னை யாரும் தீண்டக்கூடாது. என்னை யாராவது தீண்டினால், அவர்களுக்கு நீ தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியது. அரசனும் ஒப்புக்கொண்டு, மகா ராணியுடன் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தார்.

ஒரு சமயம் அரசவை தோட்டத்தில், அந்தச் சிறுமி பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அப்போது மிகுந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்ட ஒரு அந்தணர் கங்கை நீர் நிரம்பிய குடத்தை தோளில் ஏந்தியபடி அங்கு வந்து, அந்தச் சிறுமியை நோக்கி "பெண்ணே.. நீ யார்?" என்று கேட்டு தொட்டார். உடனே அந்தச் சிறுமி அலறினாள். அவளது சத்தம் கேட்டு அங்கு வந்த அரசனிடம், "இந்த ஆள் என்னை தீண்டி விட்டார். இவருக்கு தண்டனை வழங்குங்கள்" என்றாள்.

அரசனும் அந்த அந்தணரை, ராமநாத சுவாமி கோவிலுக்கு இழுத்துச் சென்று, அங்குள்ள சங்கிலியால் பிணைத்து வைத்தார். பின்னர் தன் மகளிடம், "பெண்ணே.. கவலைப்படாதே.. நாளை விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்குகிறேன்" என்று கூறினார்.

அன்றைய தினம் மன்னனிடம் கனவில் சங்கு- சக்கரதாரியாக தோன்றிய மகாவிஷ்ணு, "மன்னா.. அந்தணராக வந்தது நான்தான். இப்பொழுது உன்னிடம் வளர்ந்து வரும் பெண், மகாலட்சுமியே ஆவாள்" என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்த மன்னன், சங்கிலியால் தான் பிணைத்த அந்தணரைக் காணாதது அறிந்து தவித்தார். 'இறைவனையே சங்கிலியால் பிணைத்து விட்டேனே' என்று வருந்தினார். தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு, "நீ என்னை சங்கிலியால் பிணைத்த கோலத்திலேயே, மகாலட்சுமியுடன் 'சேது மாதவன்' என்ற பெயரில் நான் இங்கேயே தங்கிவிடப் போகிறேன். உனக்கு வைகுண்ட பதவியும் அருள்வேன்" என்று கூறி மறைந்தார்.

ஸ்ரீ ராமநாத சுவாமி ஆலயத்தில் மேற்புறம் இரண்டாம் பிரகாரத்திற்கும் மூன்றாம் பிரகாரத்திற்கும் இடையே `சேது மாதவ தீர்த்தம்' என்ற குளம் இருக்கிறது. இதற்கு வடக்கு புறம் 'சேது மாதவர்' சன்னிதியும் இருக்கிறது. இங்கு நீராடி, சேது மாதவரை தரிசிப்பவர்களுக்கு சேதுஸ்னான பலன் கிடைக்கும் என்றும், தனுஷ்கோடியில் இருந்து கொண்டு வரும் மணலை இவருடைய சன்னிதியில் வைத்து பூஜை செய்தால் காசி யாத்திரை பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

ராமேஸ்வரம், பிரயாகை, காசி ஆகிய மூன்று இடங்களும் சிவபெருமானுக்கு உரிய இடங்களாக பொதுவாக அறியப்பட்டாலும், இந்த மூன்று இடங்களிலுமே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரத்தில் சேது மாதவர் இருப்பதைப் போல, பிரயாகையில் வேணி மாதவர், காசியில் பிந்து மாதவர் என்ற பெயரில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார்.

ராவண வதம் முடிந்து ராமேஸ்வரம் வந்த ராமபிரான், சீதாதேவியுடன் சேர்ந்து சிவபெருமானை பூஜிக்க எண்ணினார். அதற்காக ஆஞ்சநேயரை நோக்கி "நீ காசிக்குச் சென்று ஒரு சிறந்த லிங்கத்தை எடுத்து வா" என்று அனுப்பினார். காசிக்குச் சென்ற அனுமன், சிறந்த சிவலிங்கத்தைத் தேட, ஆகாயத்தில் பறந்த கருடன், அப்படியொரு சிவலிங்கத்தை அனுமனுக்கு காண்பித்து உதவியது. அந்த சிவலிங்கத்தை அனுமன் எடுக்க, அதை பைரவர் தடுத்தார்.

இருப்பினும் ராமனின் அருளால் சிவலிங்கத்தை அனுமன் எடுத்துச் சென்றுவிட்டார். அப்போது ஏற்பட்ட சாபம் காரணமாகத்தான், இன்றளவும் காசியின் மீது கருடன் பறப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் சிவலிங்கத்துடன் ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. எனவே சீதா பிராட்டி மணலில் சிவலிங்கம் ஒன்றை பிடித்துவைக்க, அதற்கு ராமபிரான் பூஜை செய்தார். அப்போது சிவலிங்கத்துடன் வந்த அனுமன், "பிரபு.. நான் எடுத்து வந்த சிவலிங்கத்தை தாங்கள் பூஜிக்க வேண்டும்" என்றார். அதற்கு ராமபிரான் "மணலில் செய்த இந்த சிவலிங்கத்தை அகற்றி விடு" என்று கூற, தன் வாலால் அனுமன் சிவலிங்கத்தை அகற்ற முயன்றார். ஆனால் அது முடியாமல் பல அடி தூரம் போய் விழுந்தார். ஆஞ்சநேயரின் வால் பட்ட அடையாளம், அந்த மணல் லிங்கத்தின் மீது இன்றளவும் காணப்படுவதாக சொல்கின்றனர்.

ஆஞ்சநேயர் கொண்டு வந்த சிவலிங்கமானது, ராமநாதர் சன்னிதிக்கு வடக்கு புறம் உள்ளது. இந்த சன்னிதியில் இருந்துதான் முதல் பூஜையை தொடங்குவார்கள். ராமேஸ்வர யாத்திரையில் மணலில் மூன்று சிவலிங்கம் பிடித்து, அதை வேணி மாதவர், பிந்து மாதவர், சேது மாதவர் என பூஜிப்பார்கள். சேது மாதவரை கடலில் கரைத்து விட்டு, பிந்து மாதவரை தானம் செய்துவிட்டு, வேணி மாதவரை எடுத்துச்சென்று பிரயாகையில் உள்ள திரிவேணியில் கரைப்பார்கள். சிலர் பிந்து மாதவரை காசியில் கங்கையில் கரைக்கலாம் என்பார்கள். அது அவரவர் விருப்பம். ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை காசியில் இருந்து எடுத்து வந்ததால், பிந்து மாதவரை காசியில் கரைக்கும் பழக்கமில்லை என்பது பெரியோர்கள் கருத்து.

காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டதும், மீண்டும் ராமேஸ்வரம் பிரயாகையில் எடுத்த புனித நீரைக் கொண்டு ராமநாதரை அபிஷேகம் செய்து யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். கூடுமானவரை பிரயாகையில் இருந்து எடுத்து வரும் நீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து வராமல், பித்தளை சொம்பில் எடுத்து வருவது உத்தமம். ராமேஸ்வரத்தில் தொடங்கி பின் ராமேஸ்வரத்தில் இந்த காசி யாத்திரை முடியும்.

மேலும் செய்திகள்