< Back
ஆன்மிகம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில்
ஆன்மிகம்

மாணிக்கவாசகருக்கு திருவடி தரிசனம் தந்த இறைவன்.. திருக்கழுக்குன்றத்தில் இன்றும் காணலாம்

தினத்தந்தி
|
27 Aug 2024 7:55 AM GMT

கிரிவலம் செல்பவர்கள் சஞ்சீவி மலையடிவாரத்தில் உள்ள செம்மண்ணை எடுத்து நெற்றியிலும், உச்சியிலும் பூசிக் கொள்வார்கள்.

தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவத்தலங்களில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது வேதகிரீஸ்வரர் ஆலயமும் ஒன்று. வேதமே மலையாக அமைந்திருப்பதால் வேதகிரி என பெயர் பெற்றது. நான்கு வேதங்களை உணர்த்தும் வகையில் இங்கு நான்கு குன்றுகள் இணைந்திருக்கின்றன. வேதகிரியின் உச்சியில் சிவபெருமான் சுடர் கொழுந்தாய் - சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார்.

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் இங்கிருந்து இறைவனை கண்டு திருப்பாடல் பாடியுள்ளார். இறைவனும் அவருக்கு குருவடிவாக எழுந்தருளி காட்சியளித்துள்ளார். இதனை "கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய்க் கழுக்குன்றிலே" என மாணிக்கவாசகர் குறிப்பிட்டு உணர்த்துகின்றார்.

இத்தலத்தில் கிரிவலம் வரும்போது சுற்று முடிவதற்குள் சிறிது தூரத்தில் மூவர்பேட்டை (சைவ சமய குரவர்கள் மூவர் நின்று பாடிய இடம்) அமைந்துள்ளது. மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது. அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கருங்கல் மேடைகள், ஒரு கிணறு ஆகியவை உள்ளன. இம்மலையைச் சுற்றி வருவோர், சிறிது நேரம் இங்கு அமர்ந்து வேப்பங்காற்றை அனுபவித்து, இம்மலையடிவாரத்தில் உள்ள செம்மண்ணை எடுத்து நெற்றியிலும், உச்சியிலும் பூசிக் கொள்வார்கள். சிலர் மருந்தாக நினைத்து உட்கொள்வதும் உண்டு. இவ்வாறு பயன்படுத்தப்படும் மண், மலை மருந்து என்றும், இதை பயன்படுத்துவதால் நோய் நீங்கும் என்றும் கூறுவார்கள்.

கிணற்று நீர் சஞ்சீவி மலையின் ஊற்று நீர் என்று அதனையும் பருகி இன்புறுவார்கள். இச்சஞ்சீவி மலை பகுதியை கடந்து செல்லும்போது மாணிக்கவாசகருக்கு இறைவன் திருவடி தரிசனம் தந்த திருவடிகளை காணலாம். அவற்றை கடந்ததும் சிறுகுன்றின் மேல் திருமலை சொக்கம்மாள் கோவிலை கண்டு வணங்கலாம்.

மேலும் செய்திகள்