< Back
ஆன்மிகம்
கண்ணன் விரும்பிய துவாரகை
ஆன்மிகம்

கண்ணன் விரும்பிய துவாரகை

தினத்தந்தி
|
16 Dec 2024 8:39 PM IST

நாத துவாரகையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள காங்ரோலி துவாரகை எனும் ஊரில் அழகிய கண்ணன் கோவில் உள்ளது.

கண்ணனாகப் பிறக்க திருமால் தேர்ந்தெடுத்த திருத்தலம் வட மதுரை எனும் மதுரா. இந்த ஊர் கிருதாயுகத்தில் வாமனரின் ஆசிரமமாகவும், திரேதாயுகத்தில் சத்ருக்கனனால் ஆளப்பட்ட இடமாகவும் இருந்தது. கண்ணனுக்கு பல திருப்பெயர்கள் இருப்பினும் 'மதுரையார் மன்னன்' எனும் பெயர் மிகவும் சிறப்பானது.

வடமதுரையை தலைநகராகக் கொண்டே யாதவர்கள் ஆண்டு வந்தனர். வசுதேவர், கண்ணனை அயர்ந்திருந்த யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவள் பெற்றிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து கம்சனிடம் கொடுத்தார். தேவகி மகனாய் பிறந்தவன், கோகுலத்தில் யசோதையின் மகனாய் வளர்ந்தான். கோகுலத்தின் செல்லப் பிள்ளையாகவும் சிறந்தான். தன்னை அழிக்க வந்த கண்ணன் உயிரோடு இருப்பது அறிந்து, கம்சன் அனுப்பிய அனைத்து அசுரர்களும் கண்ணனால் அழிந்தனர்.

கண்ணனுக்கு வயது பத்து. 'கண்ணனை மதுரைக்கு அழைத்து வந்து கொல்வோம்' என்று மாமன் கம்சன் திட்டமிட்டான். அக்ரூரரைக் கோகுலத்துக்கு அனுப்பினான், கற்றறிந்தவரான அக்ரூரர், கண்ணன் யார் என்பதை அறிந்துகொண்டார். அவனை கட்டித் தழுவினார். இறுதியில் கம்சன் சொன்ன செய்தியைக் கூறினார்.

மதுரைக்குள் தேர் நுழைந்தது. கம்சன் கண்ணனை அழிக்க முதலில் குவாலயபீடம் எனும் மதம் பிடித்த யானை, அதற்குத் தப்பினால் முஷ்டிகன் - சானுரன் எனும் மல்லர்கள், இறுதியில் நாமே கொல்லலாம் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால் வழியிலேயே குவாலயபீடம் என்ற யானையின் தந்தத்தை முறித்து அழித்தான் கண்ணன். பின்னர் கம்சனின் இருப்பிடம் சென்று மல்லர்களுடன் போரிட்டு அவர்களையும் வீழ்த்தினான். இறுதியில், உயர்ந்த மாடத்தில் அமர்ந்திருந்த கம்சனிடம் நேராக சென்று, அவன் கிரீடத்தைத் தள்ளி, அவனையும் பூமியில் தள்ளினான். அவன்மேல் அமர்ந்து நெஞ்சில் மீண்டும் மீண்டும் ஒங்கிக் குத்தினான். நெஞ்சில் சிறிதும் ஈரமில்லாத கம்சன் அழிந்துபோனான்.

பின்னர் மதுராவை கண்ணன் ஆட்சி செய்தான். அந்த நேரத்தில் மகதநாட்டு மன்னன் ஜராசந்தன் பலமுறை படையெடுத்து மதுராவை தாக்கினான். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போனாலும், மீண்டும் மதுராவை கைப்பற்றத் துடித்தான். அதனால் கண்ணன், 'இங்கிருந்தால் தானே இவன் போருக்கு வருகிறான். நாம் இடம்பெயர்ந்து வேறு இடம் போவோம்' என்று புறப்பட்டு விட்டார். துவாரகையை உருவாக்கி ஆட்சி செய்தார்.

கண்ணன் துவாபரயுகத்தில் ஆட்சி செய்த துவாரகை, கடலில் மூழ்கி விட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் துவாரகையின் பெருமை மற்றும் துவாரகைநாதரின் பெருமையை பறைசாற்றும் வகையில் பஞ்ச துவாரகை தலங்கள் அமைந்துள்ளன. அதில், காங்ரோலி துவாரகையும் ஒன்று. ராஜஸ்தான் மாநிலம் ராஜஸ்மண்ட் மாவட்டம் நாதத்வாராவில் இருந்து 18 கி.மீ. தொலைவில் காங்ரோலி எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் 'ராஜ்சமந்த்' எனும் பெரிய ஆழமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரையில் அழகான இயற்கைச் சூழலில் கண்ணன் கோவில் (துவாரகாதீஷ் கோவில்) அமைந்துள்ளது.

இத்தல இறைவனின் மீது ஆடை, ஆபரணங்கள் சாற்றுவார்கள். சில சமயங்களில் எவ்வளவு பசை தடவினாலும் அதில் ஆடை, ஆபரணங்கள் ஒட்டாதாம். அப்போது அர்ச்சகர்கள் பாதாம், கற்கண்டு, வெண்ணெய் என கண்ணனுக்கு பிடித்தவற்றை நைவேத்தியமாக செய்து, "கண்ணே, கண்மணியே, செல்லக் கண்ணா, நீ நல்ல பிள்ளை அல்லவா? பிடிவாதம் செய்யலாமா? உன் அருள்பெற பக்தர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதானே அருள்செய்ய வேண்டும். எனவே, அலங்காரம் செய்துகொள்" என்று செல்லமாகக் கொஞ்சியும், கெஞ்சியும் வேண்டுவார்களாம். அதன் பின்பு ஆடை, ஆபரணங்கள் சரியாகப் பொருந்திக் கொள்ளும் அதிசயம் நிகழ்வதாக சொல்கிறார்கள்.

மேலும் செய்திகள்