< Back
ஆன்மிகம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
ஆன்மிகம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
26 March 2025 12:28 PM IST

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்காசி,

தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் மேற்கொள்ளவும், கூடுதலாக ரூ.1.60 கோடி செலவில் ராஜகோபுர பணியும் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இதனையடுத்து வருகிற 7-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதாவது, ராஜகோபுரத்தில் பழுதடைந்த சிற்பங்களை சீரமைத்தல், சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசுதல், கோவில் உள்பகுதியில் சகஸ்ர லிங்கம், பராசக்தி பீடம், சொக்கநாதர்-மீனாட்சி சன்னதி, காலபைரவர் சன்னதி, உலகம்மன் சன்னதி, முருகன் சன்னதி, சுவாமி சன்னதியில் பராமரிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளது. சுவாமி, அம்பாள் சன்னதியில் புதிய கொடி மரங்கள் அமைக் கப்பட்டது. யாகசாலை அமைப்பதற்காக கால் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் பதவியேற்ற அறங்காவலர் குழு நேரடியாக களத்தில் இறங்கி திருப்பணிகளை இரவும், பகலும் கண்காணித்து துரிதப்படுத்தி வருகிறார்கள். அறங்காவலர் குழுத்தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், திருப்பணி நன்கொடையாளர்களான தொழிலதிபர் அழகர்ராஜா, வெங்கடேஷ் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வேங்கடரமணன் உள்ளிட்ட நன்கொடையாளர்களால் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

மேலும் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ஆலோசனையின் பெயரில் கோவில் செயல் அலுவலர் பொன்னி மற்றும் கோவில் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த பணிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து யாகசாலை பூஜைகள் வரும் 3-ந் தேதி தொடங்குகின்றன.

மேலும் செய்திகள்