குலசை தசரா திருவிழா: ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்
|இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா கொண்டாப்படுவது இங்குதான். இங்கு அருள்பாலிக்கும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குலசை நோக்கி படையெடுத்து வருவர். பொதுவாக சிவன் சன்னதி தனியாகவும், அம்மன் சன்னதி தனியாகவும்தான் கோவிலில் இருக்கும். ஆனால் குலசையில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் உடன் ஒரே பீடத்தில் இருந்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 12-ந் தேதி இரவு நடக்கிறது. இத்திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் 41 நாள், 31 நாள், 21 நாள் என தங்கள் வசதிக்கேற்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். இதில் பெரும்பாலான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
இந்த வகையில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை 21 நாட்கள் வருவதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்கள், வேன்கள், பஸ்கள் மூலம் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். மேலும், பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் நேற்றைய தினம் குலசை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பரபரப்பாக காட்சியளித்தன.
தசரா திருவிழாவை முன்னிட்டு, காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.