சபரிமலையில் உள்ள வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?
|அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும்.
எருமேலி தர்மசாஸ்தா சன்னதி: அய்யப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசேகரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின்போது 'சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம்' என்று பாடவேண்டும். காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.
பம்பா நதி வழிபாடு: பம்பை நதியில் பக்தியுடன் அய்யப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும். காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாவதாக ஐதீகம்.
பம்பை-ஸ்ரீராமர், அனுமன் வழிபாடு: பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ராமர் கோவிலிலும் அனுமன் கோவிலிலும் வழிபட வேண்டும்.
பந்தளராஜ வந்தனம்: நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்ட பிறகே செல்ல வேண்டும்.
அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி: அய்யப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமான கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி அரிசி மாவு உருண்டையும் வெல்ல உருண்டைகளையும் இந்தக்குழியில் போட வேண்டும்.
சரஸ்குழி ஆல்துறை: கன்னி சுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.
நெய் அபிஷேகம்: இந்த அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.
கணபதி சுவாமி சன்னதி: இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய் தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.
சண்முக சுவாமி சன்னதி: இதுவும் மகா கணபதி சன்னி தானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம் ஊதுவத்தி, கற்பூரம் போன்றவற்றை ஏற்றி வழிபட வேண்டும்.
மாளிகைப்புரத்தம்மன்: சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். தேங்காய் உருட்டல் இந்த அம்மனுக்குரிய முக்கியமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு போன்றவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவேண்டும்.
கருத்த கயாமிகள்: அவல், நெல்பொறி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்தபொடி போன்றவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.
சுருப்ப சுவாமிகள்: இங்கு கற்கண்டு, திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.
நாகராஜா, நாகஷியம்: இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் சர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க சர்ப்ப பாட்டு பாட வேண்டும். இந்த சன்னதியில் வாசனை திரவியங்களான பன்னீர், ஊதுவத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும்.