< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

திருமலையில் கார்த்திகை வனபோஜனம்

தினத்தந்தி
|
17 Nov 2024 5:47 PM IST

பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருப்பதி:

திருப்பதி திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று (17.11.2024) கார்த்திகை வனபோஜன உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வனபோஜன நிகழ்ச்சி வழக்கமாக ஏழுமலையான் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு , கனமழை எச்சரிக்கையால் இடமாற்றம் செய்யப்பட்டது. கோவில் அருகில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.

அதன்படி, இன்று கோவில் அருகிலேயே வனபோஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் சிறிய கஜவாகனத்தில் மலையப்ப சுவாமி உற்சவ மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் ஊர்வலமாக வந்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் (வன போஜனம்) வழங்கப்பட்டது.

வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று நடக்க இருந்த கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்