கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
|திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 மாதமும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா 14-ந்தேதி வரை என 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 5-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
12-ந் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு நவரத்தினங்களான செங்கோல் சாற்றி பட்டாபிஷேகம் நடக்கிறது. 13-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. சன்னதி தெருவில் உள்ள 16 கால் மண்டபம் அருகில் இருந்து நகரின் நான்கு முக்கிய வீதிகளில் தேர் வலம் வருதல் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீப மேடையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக கோவிலில் 3½அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றப்பட உள்ளது. மேலும் 100 மீட்டர் காடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய் பயன்படுத்தப்பட உள்ளது. கோவிலுக்குள் மாலை 6 மணி அளவில் பால தீபம் ஏற்றப்படும்.
இதே நேரத்தில் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து 14-ந் தேதி காலையில் தீர்த்த உற்சவம் நடக்கிறது. தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.