பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா; விமரிசையாக நடந்த திருக்கல்யாண உற்சவம்
|பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல்,
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் கடந்த 2-ந்தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில், கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி, தனது வேலாயுதத்தால் சூரனை வதம் செய்து வெற்றி வாகை சூடிய முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சண்முகருக்கு பட்டாடை, ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பழனி மலைக்கோவிலில் குவிந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மங்கள பிரசாதமும், திருமண விருந்தும் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.