கந்தசஷ்டி விழா: திருச்செந்தூருக்கு பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்
|சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி இருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
5-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கந்தசஷ்டி சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி தூக்கி, பாத யாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர்.
சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்படத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.
சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். தங்கும் இடம், உணவு, குடிநீர், கழிவறை, வாகன நிறுத்தம், மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.