< Back
ஆன்மிகம்
திருத்தணியில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்
ஆன்மிகம்

திருத்தணியில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
8 Nov 2024 1:29 PM IST

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில்தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலை மீது, முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. முருகப் பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகப்பெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது. மாலை 4.45 மணிக்கு முருகப்பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி 6-வது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில்தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம். அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.

இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, வள்ளி தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்