< Back
ஆன்மிகம்
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
ஆன்மிகம்

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
24 Oct 2024 3:24 PM IST

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7-ம் தேதி நடக்கிறது.

திருச்செந்தூர்,

உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7-ம் தேதி மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. நவ. 8-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 18 இடங்களில், மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன.

கோவில் வளாகத்தில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தன்னார்வலர்களால் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும் கந்த சஷ்டி விழாவில் யாகசாலை பூஜை, தங்க ரதம் வீதி உலா மற்றும் இதர நிகழ்வுகளை பக்தர்கள் எளிதில் காணும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்படவுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பேருந்துகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, திருக்கோயிலுக்கு வெளியே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்