திருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்.. மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உக்ர சீனிவாசமூர்த்தி
|திருமலையில் கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை வீதியுலா நிகழ்வு நடைபெற்றது.
அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது. கைசிக புராணத்திலிருந்து பகவானின் தீவிர பக்தனான நம்பாடுவானின் கதையை வேத பண்டிதர்கள் பாராயணம் செய்தனர். இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி, தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மற்ற திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளின் போது, மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.