< Back
ஆன்மிகம்
கந்த சஷ்டி கவசம் உருவானது எப்படி?
ஆன்மிகம்

கந்த சஷ்டி கவசம் உருவானது எப்படி?

தினத்தந்தி
|
7 Nov 2024 3:29 PM IST

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார்.

கந்த சஷ்டி கவசம் என்பது பக்தர்களை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் கவசம் என்று அழைக்கின்றோம். கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள்.

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்தது. 'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்