தொடர் விடுமுறை: கள்ளழகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
|தொடர் விடுமுறையால் கள்ளழகர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்,
பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் மதுரைக்கு வடக்கே 21 கி.மீ. தொலைவில் அழகர்கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும் கந்த சஷ்டியின் 2-ம் நாளான நேற்று, முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலை மலை முருகன் கோவிலில் காமதேனு வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மேளதாளம் முழங்க சாமி புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் சஷ்டி மண்டபத்தில் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.