< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலய சிறப்புகள்

தினத்தந்தி
|
8 Dec 2024 11:31 AM IST

கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி என்னும் ஊரில் அமைந்திருக்கிறது ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் ஆலயம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் உள்ளன.

இத்தலத்திற்கு பிரமபுரி, ஹரிஹரபுரம், அமிர்தபுரம் என்று வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. பிரம்மன் இந்த தலத்திற்கு வந்து வணங்கியதால் இந்த தலத்திற்கு பிரமபுரி என்றும் திருமால் பூஜித்ததால் ஹரிஹரபுரம் என்றும் கருடன் இந்த தலத்தின் இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமிர்தபுரி என்றும் பெயர் பெற்றிருக்கிறது.

இந்த தலத்திற்கு முன்பு தான் காவிரி ஆறு பாய்ந்து ஓடுவது மேலும் சிறப்பு. இவ்விடத்திலிருந்து தான் காவிரி ஆறானது கிழக்கு திசையில் திரும்பி பாய்ந்து ஓடுகிறது. இந்த ஸ்தலத்தில் காவிரி ஆறு, பிரம்ம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் மற்றும் தேவ தீர்த்தம் என்று நான்கு தீர்த்தங்கள் உள்ளன.

இந்த தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய முப்புலவர்களால் பாடப்பட்டிருக்கிறது. தேவார பாடல்களில் இடம்பெறும் 274 சிவாலயங்களில் 213 வது சிவாலயமாக இந்த தலம் இடம்பெற்றுள்ளது.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட கோவில் என்பதால் இந்த தலத்தில் நாகர் வழிபாடு மிகவும் விசேஷமாக அமைந்திருக்கிறது.

இக்கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகரை காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் அப்பேறு வாய்க்கப்பெறும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷம், களத்திர தோஷம், ஸ்திரீ தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று பல தோஷங்களும், தடைகளும் நிச்சயம் நீங்கும்.விழாக்கள் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. பழனிக்கு காவடி எடுப்பவர்கள் இங்கிருக்கும் காவிரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு காவடியை தொடங்குவது காலங்காலமாக பின்பற்றும் நடைமுறையாக இருந்து வருகிறது.

இது தவிர ஐப்பசி பௌர்ணமி, தைப்பூசம், ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரமோற்சவம் 11 நாட்கள் பெருவிழாவாக நடைபெறுகிறது. பூஜிக்கப்படுகிறது. தேர் திருவிழா, உற்சவர் வீதியுலா போன்றவைகளையும் நிகழ்த்துகின்றனர். தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோவில் என்ற பெருமையை பெற்ற இந்த ஆலயம் வந்து வழிபட்டால் மூன்று மடங்கான ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பாவங்களும், சாபங்களும் நீங்கி அந்த காவிரி ஆறு அழகாக புரள்வது போல இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி புரளும் என்று முழுமனதாக நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்