சுமையோடு வருவோருக்கு சுகம் அளிக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
|திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் வேளாங்கண்ணி வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். உலகப் புகழ் பெற்றுத் திகழும் இந்த ஆலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.
இங்கு எல்லா சமயங்களையும் சார்ந்த பக்தர்கள் வந்து மாதாவை வழிபடுகின்றனர். வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றார்கள். திருமண தடை, குடும்ப பிரச்சினை, நினைத்த காரியம் நிறைவேற, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி வந்து திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி புதுக்கோவிலின் பின்பக்க வாசலில் இருந்து பழைய வேளாங்கண்ணி கோவில் மாதா குளம் வரை முழங்கால் போட்டபடி சென்று அன்னையை வழிபடுகிறார்கள். புதுக்கோவிலில் இருந்து பழைய கோவில் வரை பக்தியுடன் இவ்வாறு முழங்கால் போட்டு சென்றால், வேண்டியது நிச்சயம் நடந்தேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் பழைய கோவிலின் ஆலமரத்தில் தாலிக் கயிற்றை கட்டுகிறார்கள். இதேபோல் குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டவர்கள் தொட்டிலையும், தீராத நோய் மற்றும் உடல் நலம்பெற வேண்டியவர்கள் அந்தந்த உடல் உறுப்பு பகுதிகளை தகடுகளாகவும் ஆலமரத்தில் கட்டிவிட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், பின் மீண்டும் வந்து தங்களது பிரார்த்தனை மூலமாக நன்றியை தெரிவிக்கிறார்கள்.
சுமையோடு வருபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அவர்களின் மனதை சுகமாக்கும் ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார் வேளாங்கண்ணி மாதா.