வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்..!
|விநாயகர் விரதம் இருப்பதால் வாழ்வில் வளங்கள் சேரும், சிறந்த கல்வியறிவு, தெளிந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முழுமுதற் கடவுளான விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். உள்ளன்போடு யார் அழைத்தாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவானவராகவும், சுலபமாக வழிபடும் தெய்வமாகவும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப்போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான். இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதில் இருந்தே கயிலை நாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால் அவள் விநாயகரை நினைத்து விரதம் மேற்கொள்ள வேண்டும் என அவளது தந்தையார் பர்வரதராஜன் ஆலோசனை கூறினார்.
அவர் கூறியபடியே, மண்ணால் ஒரு விநாயகர் சிலையை உருவாக்கினாள் பார்வதி தேவி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து, இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் பூஜையை ஆரம்பித்து, பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
பூஜையின் நிறைவில் மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியில் இறக்கி விட்டாள். பார்வதி தேவி, அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
எனவே, விநாயகர் விரதம் இருப்பதால் வாழ்வில் வளங்கள் சேரும், சிறந்த கல்வியறிவு, தெளிந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். வரும் 7-ம் தேதி (7.9.2024) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகரை மனமுருக பிரார்த்தனை செய்யவேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடையும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் விநாயகருக்கு நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளை தயாரித்து நிவேதனம் செய்ய வேண்டும்.
மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும்.