எந்த சூழ்நிலையிலும் தைரியலட்சுமியை மட்டும் விட்டு விடாதீர்கள்!
|போஜ மகாராஜன் தைரிய லட்சுமியை மட்டும் தன்னுடன் இருக்க வரம் கேட்டதால், மற்ற லட்சுமிகளின் அருளும் அவனுக்கு கிடைத்தது.
லட்சுமி தேவி பூமியில் அவதரித்த பல வடிவங்களில் வீர லட்சுமி என்று அழைக்கப்படும் தைரிய லட்சுமியும் ஒன்று. தேவியின் இந்த அவதாரம் வீரம், வலிமையின் உருவகம் ஆகும். வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் பொறுமை மற்றும் வலிமையை இந்த தேவி வழங்குகிறாள். அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு உதை உள்ளது.
போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான். அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள். சரி நாளை நீங்கள் போகும்போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான்.
மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் வரம் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லட்சுமி வந்தாள். தைரிய லட்சுமியிடம் போஜன் வரம் கேட்டான். "அம்மா.. நீ மட்டும் என்னுடன் இங்கேயே தங்க வேண்டும் என்பதே நான் கேட்கும் வரம்" என்றான் போஜன். கேட்ட வரத்தை கொடுத்த தைரியலட்சுமி, அங்கேயே தங்கி விட்டாள்.
மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும்போது 'தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன்' என்று நினைத்துக் கொண்டு போனான். அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருந்தனர். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். 'நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே' என்று கேட்டான் போஜன்.
'தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது' என்றார்கள் ஏழு லட்சுமிகள். எனவே, அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையான தைரிய லட்சுமியை வழிபட்டால் மற்ற லட்சுமிகளின் அருட்கடாட்சமும் கிடைக்கும்.