மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்

பிரதான கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பதால், சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காத்மாண்டு:
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா நன்மைகளையும் இது ஒரு சேர வழங்கிவிடுவதால் இது மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. எனவே மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட மகா சிவராத்திரியன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானை பூஜிப்பது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி இன்று (26.2.2025) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவாலயங்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சிவபெருமானை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.
பிரதான கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பதால், சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரி இரவில் 4 கால பூஜை நடைபெறும். இந்த நான்கு காலங்களிலும் கோவில்களில் ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்து, வழிபாடு நடைபெறும்.