< Back
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: கட்டண சேவைகள் ரத்து
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: கட்டண சேவைகள் ரத்து

தினத்தந்தி
|
20 Oct 2024 11:24 AM IST

மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி தினத்தன்று (31.10.2024) தீபாவளி ஆஸ்தானம் என்று அழைக்கப்படும் தர்பார் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே இந்நிகழ்ச்சி நடைபெறும்.

ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில், கோவிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார். உடன் ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆஸ்தானம் நடைபெறும். சிறப்பு பூஜை, ஆரத்தியைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மாலை 5 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவையைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி நான்கு மாட வீதிகளில் கம்பீரமாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு 31-ம் தேதி திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

மேலும் செய்திகள்