< Back
ஆன்மிகம்
கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
5 March 2025 6:40 PM IST

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை,

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கான முகூர்த்த கால் கடந்த மாதம் 10-ந்தேதி நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 18-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியும், 25-ந் தேதி கோவில் கொடியேற்றமும், அக்னிசாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து நாள்தோறும் அக்னி கம்பத்திற்கு பக்தர்கள் நீர் ஊற்றி வழிபட்டனர்.

தேர்திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதி அம்மன் புலி வாகனத்திலும், 27-ந்தேதி கிளி வாகனத்திலும், 28-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 1-ந்தேதி அன்ன வாகனத்திலும், 2-ந்தேதி காமதேனு வாகனத்திலும், நேற்றுமுன்தினம் வெள்ளை யானை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நேற்று மாலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டதும், பக்தர்கள் ஓம் சக்தி என்று வாழ்த்து கோஷமிட்டனர்.

தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'ஓம் சக்தி', 'பராசக்தி' கோஷத்துடன் உற்சாகமாக வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

இந்த தேரானது ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, வைஷியால் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக பக்தர்களால் இழுத்து வரப்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்