< Back
மாநில செய்திகள்
கோவையில் கோலாகலமாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கோவையில் கோலாகலமாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
6 March 2025 10:59 AM IST

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த மாதம் 10-ந் தேதி முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு, 25-ந் தேதி கோவில் கொடியேற்றம், அக்னிசாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் நாள்தோறும் அக்னி கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபட்டனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் அதிகாலை 5 மணியளவில் பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.

நேற்று காலை முதல் ராஜவீதியில் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து மதியம் 2.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது.

தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மாலையில் தேர் நிலைத்திடலை வந்தடைந்தது.

தேரோட்டத்தையொட்டி இந்து அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்தை ஒழங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவிழாவையொட்டி இன்று குதிரை வாகனத்தில் கோனியம்மன் திருவீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழா, வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் நடக்கிறது. 8-ந்தேதி கொடியிறக்கமும், 9-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. 10-ந்தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்