< Back
ஆன்மிகம்
சாத் பூஜை முதல் நாள்.. புனித நதிகளில் நீராட குவிந்த பக்தர்கள்
ஆன்மிகம்

சாத் பூஜை முதல் நாள்.. புனித நதிகளில் நீராட குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
5 Nov 2024 12:37 PM IST

பீகார் மாநிலம் பாடலிபுத்திரத்தில் உள்ள கங்கையில் ஏராளமானோர் புனித நீராடினர்.

சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகை சாத் பூஜை ஆகும். பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களாலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் சாத் பூஜை மிகவும் பிரபலமானது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சாத் பூஜை இன்று (5.11.2024) நஹாய்-காய் சடங்குடன் தொடங்கியது. முதல் நாளான இன்று காலையில் காசி, கங்கை மற்றும் கர்னாலி போன்ற புண்ணிய நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர். பீகார் மாநிலம் பாடலிபுத்திரத்தில் உள்ள கங்கையில் ஏராளமானோர் புனித நீராடினர். புனித நீராடியபின்னர் சூரிய பகவானுக்கு புனித நீரை சமர்ப்பணம் செய்தனர். பின்னர் வீட்டிற்கும் புனித நீரை எடுத்துச் சென்றனர். சூரிய பகவானுக்கு படைக்கும் பிரசாதங்கள் தயாரிக்க இந்த புனித நீரை பயன்படுத்துவார்கள்.

புண்ணிய நதிகளுக்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீராடி புனித நீரை எடுத்துச் சென்றனர். இது முதல் நாள் சாத் பூஜையின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும்.

இரண்டாவது நாளில் கர்னா எனப்படும் சடங்குகள் நடைபெறும். மூன்றாம் நாள் மாலை மறையும் சூரியனையும், நாளை காலை உதிக்கும் சூரியனையும் பக்தர்கள் வழிபடுவார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்து, வழிபடுவார்கள். இரண்டாம் நாள் விரதம் முடித்து பிரசாதம் சாப்பிடும் பக்தர்கள், அதன்பின் 36 மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் முழு உபவாசம் இருந்து சூரிய பூஜை செய்வார்கள். 8.11.2024 அன்று சாத் பூஜை நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்