< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

சாத் பூஜை கொண்டாட்டம் நிறைவு.. சூரிய வழிபாடு செய்ய நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
8 Nov 2024 12:27 PM IST

சாத் பூஜையின் நிறைவு நாளான இன்று காலையில் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தார்கள்.

இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் சூரிய வழிபாடும் ஒன்று. சூரியனைப் போற்றி வணங்கும் வகையில் வட மாநிலங்களில் சாத் பண்டிகை 4 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களாலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் சாத் பூஜை மிகவும் பிரபலமானது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சாத் பூஜை கடந்த 5-ம் தேதி (5.11.2024) நஹாய்-காய் சடங்குடன் தொடங்கியது. அன்றையதினம் காலையில் காசி, கங்கை மற்றும் கர்னாலி போன்ற புண்ணிய நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர், பின்னர் வீட்டிற்கும் புனித நீரை எடுத்துச் சென்றனர். அதை பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்கத் தொடங்கினர்.

பூஜையின் இரண்டாம் நாளான கர்னா தினத்தில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய பகவானை வழிபட்டு விரதத்தை தொடங்கினர். நாள் முழுவதும் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து, மாலையில் கீர், இனிப்பு சப்பாத்தி, வாழைப்பழம் போன்ற பாரம்பரிய பிரசாதத்தை சூரிய பகவானுக்கும், அவரது சகோதரியான சத்தி மையாவுக்கும் படைத்து வழிபட்டனர். பின்னர் பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் 36 மணி நேரம் உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் முழு உபவாசத்தை தொடங்கினர்.

மூன்றாம் நாளான நேற்று சந்தியா அர்க்யா எனப்படும் மாலை நேர படையல் செய்து சூரிய பகவானை வழிபட்டனர். விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், பூஜைக்கான பிரசாதத்தை மூங்கில் தட்டில் வைத்து, நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று தண்ணீருக்குள் நின்றபடி சூரிய பகவானுக்கு சமர்ப்பணம் செய்தனர்.

சாத் பூஜையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக இன்று காலையில் (8.11.2024) உதிக்கும் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபட்டனர். அதன்பின்னர் 36 மணி நேர விரதத்தை நிறைவு செய்தனர். இத்துடன் சாத் பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்தது.

டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாத் பூஜை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சூரிய வழிபாடு செய்து சூரிய பகவானுக்கு பிரசாதம் படைப்பதற்காக புனித நதிகள், ஏரிகள், குளக்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நீர்நிலைகள் இல்லாத பகுதிகளில் தற்காலிகமாக செயற்கை நீர்நிலைகள் அமைக்கப்பட்டு, பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது.

தமிழகத்திலும் சாத் பூஜை கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சூரிய வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்