திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
|திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது .
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் விழாவான நேற்று காலை 11.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது.
நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். மாணவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியில் செல்ல, அவர்களை தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்தனர். பின்னர் விநாயகரும், சந்திரசேகரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாணவர்கள் சுமந்து செல்லும் காட்சியை காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர், பிரமணியர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரிய தேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாட வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள்.
பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தையொட்டி இன்று திருவண்ணாமலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.