கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
|காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலையில் 6 மணிக்கும் வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது சிறந்தது. இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கையும் ஏற்றலாம். ஆனாலும், மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது கூடுதல் மகிமையாகும்.
கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும், தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் வாசம் செய்வதாக ஐதீகம்.
தீபமேற்றும் நேரம்
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே தீபம் ஏற்றிவிட வேண்டும். குறிப்பாக, பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவதால், புண்ணியம் சேரும். மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும். முன்வினைப் பாவங்களும் நீங்கும், திருமணத் தடைகளும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை மாதங்களில் தீபங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டும். திண்ணையில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும், நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.
மூன்று நாட்கள்
தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது தீபம் ஏற்றி வழிபடவேண்டும். விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் சேரும். சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும் என்பார்கள். அதேபோல விளக்கின் திசையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்க வேண்டுமானால் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர வேண்டுமானால், மேற்கு திசையிலும், திருமணத்தடை நீங்க வேண்டுமானால் வடக்கு திசையிலும் விளக்கேற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
27 விளக்குகள்
திருக்கார்த்திகை தினம் அன்று வீட்டு முற்றத்தில் 4, சமையலறையில் 1, நடையில் 2, பின்கட்டில் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2 , நிலைப்படியில் 2, சாமி படத்துக்கு கீழே 2, வெளியே யம தீபம் ஒன்று, கோலமிடும் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். இந்த 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிப்பதாகும். கார்த்திகை மாதத்தின் 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.