முப்பெரும் தத்துவங்களின் உருவாக திகழும் அய்யப்ப பக்தர்கள்
|மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அய்யப்பமார்கள் அத்வைத தத்துவப்படி கடவுளாக திகழ்கிறார்கள்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலையில் உள்ள அய்யப்பனை காண பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து அய்யப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள், முப்பெரும் தத்துவங்களின் உருவமாக திகழ்கிறார்கள். அந்த தத்துவங்கள், அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகும்.
அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவை ஒன்றுபடுகின்றன என்பதாகும்.
மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அய்யப்பமார்கள் அத்வைத தத்துவப்படி கடவுளாக திகழ்கிறார்கள். அவர்களை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுவது வழக்கம். அடுத்து, விரதம் முடித்து சபரிமலை அய்யப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில் ஜீவன் வேறு, பிரம்மம் வேறு. முயற்சித்தால் ஜீவன், பிரம்மனை காணலாம் என்று விசிஷ்டாத்வைத தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்
சுவாமி அய்யப்பனை கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில், பிரம்மமும் ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவை ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய் திகழ்கின்றனர்.
சபரிமலையை பொருத்தவரை மணி கட்டும் வழக்கம் பிரபலமானது. மூன்றாம் ஆண்டு சபரிமலைக்கு செல்லும்போது அய்யப்ப பக்தர்கள் மணியை எடுத்து செல்வார்கள். மூன்றாவது யாத்திரை மிகவும் புனிதமாக கருதப்படுவதற்கு காரணம், அப்போது தான் ஒரு மனிதன் முழு நிலையை அடைகிறான். அய்யப்பனின் கருணை இருந்தால் மட்டுமே ஒருவரால் மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்யமுடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையை காண்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம். மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, அய்யப்பனை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவத்தில் காண்பதற்கு இணையானதாகும். அந்த வகையில் மூன்றாவது சபரிமலை யாத்திரை மிகவும் முக்கியமானது.