மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்
|மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும்.
சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்களை விளக்கும் சிறப்பு அலங்காரம் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது இதன் சிறப்பு அம்சமாகும். இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது.
திருவிழாவில் நேற்று மாலை நரியை பரியாக்கிய திருவிளையாடல் அலங்காரம் நடந்தது. இதற்கான சிறப்பு அலங்காரத்தில் வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி-அம்மன் தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளை வலம் வந்தனர். விழாவில் பாண்டிய மன்னனாக செந்தில் பட்டர் குதிரையில் வந்து இந்த திருவிளையாடல் பற்றி பக்தர்களுக்கு விளக்கினார். இந்த திருவிழாவிற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த நிலையில், ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் அலங்காரம் இன்று நடக்கிறது. இதற்காக சுந்தரேசுவரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு சென்றனர்.
அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் அலங்காரம் நடைபெறும். பின்னர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு இரவு மீண்டும் கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சுவாமி இரவு கோவிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காகஅன்னதானம், ஆடி வீதிகள் மற்றும் ஆயிரம் கால் மண்டபம் ஆகியவை திறக்கப்பட்டு இருக்கும் என கோவிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.