சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
|இன்று இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டர் தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
குமரி,
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது, அதைதொடர்ந்து காலை 6.30 மணியளவில் தலைமை பதி தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) இரவு அய்யா மயில் வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. விழாவில் தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிறப்பு பணிவிடைகளை தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த், நேமிரிஷ் ஆகியோர் செய்கின்றனர்.
30-ந் தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.
9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் நாளான 1-ந் தேதி இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11-ம் நாளான 2-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம், இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.