திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது
|அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டதாகும்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில் 4-ந்தேதியன்று கொடியேற்றமும், 10-ந்தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி அருணாசலேஸ்வரர் தேர் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இந்த தேர் வெள்ளோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செய்யப்பட்டு வருகிறது.
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டதாகும். இதில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளது. நான்கு கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவார பாலகர் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.