சபரிமலையில் பக்தர்கள் கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசிக்க ஏற்பாடு
|24 மணி நேரமும் அய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு நீர், வெந்நீர் ஆகியவை வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை,
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அய்யப்பனை கூடுதல் நேரம் தரிசிக்க அடுத்த மண்டல பூஜையின்போது ஏற்பாடு செய்யப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்காக 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது காலையில் 6 மணி முதல் 11 மணி வரையிலும், மதிய உணவு 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும், இரவு உணவு மாலை 6.30 மணி முதல் பக்தர்களின் கூட்டம் நிறைவடையும் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும், பம்பை முதல் சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சில்வர் பாட்டில்களில் அய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு நீர், வெந்நீர் ஆகியவை 24 மணி நேரமும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
18-ம் படி ஏறி சன்னிதானம் வரும் அய்யப்ப பக்தர்கள் கொடி மரத்தை வணங்கி விட்டு, இடது பக்கமாக மேம்பாலம் ஏறாமல், நேரடியாக சன்னிதான நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அவ்வாறு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். மேலும் சாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் வெளியே செல்லவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது, அடுத்த மண்டல சீசனுக்கு முன்னதாக, இது தொடர்பாக ஒரு சிறந்த முடிவு எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.