தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
|ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
தஞ்சை,
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் செய்வதற்காக 1000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கனிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்டைக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, சவ்சவ், கேரட், வெண்டைக்காய், சோளக்கதிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழைப்பூ உள்ளிட்ட காய்களாலும், தர்பூசணி, அன்னாசிபழம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
அன்னாபிஷேகம் முடிந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம் அருகில் உள்ள கல்லணைக்கால்வாயில் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.